கேரளா பெயரை ‘கேரளம்’ என மாற்றும் மசோதா மக்களவையில் அறிமுகம்
கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லாத நிலையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் இடம்பெற்றுள்ள மாநிலத்தின் பெயர் ‘Kerala’ என்பதிலிருந்து ‘Keralam’ என மாற்றப்படும். இதற்கு முன், பெயர் மாற்றத்துக்கு ஆதரவாக கேரள சட்டப்பேரவை 2024-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
பெயர் மாற்றம் நடைமுறைக்கு வர மக்களவை, மாநிலங்களவை ஒப்புதல் மற்றும் குடியரசுத் தலைவரின் அங்கீகாரம் தேவைப்படும். நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் கனிமங்கள் மற்றும் தாதுக்கள் மேம்பாடு-ஒழுங்குமுறை திருத்த மசோதா, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக திருத்த மசோதா உள்ளிட்ட மற்ற முக்கிய மசோதாக்களும் இடம்பெற்றிருந்தன.

