சாதிவாரி கணக்கெடுப்பு குளறுபடிகளை கண்டித்து தமிழக காங்கிரஸின் விழிப்புணர்வு பயணம்: செப். 17-ல் தொடக்கம்!

மத்திய பாஜக அரசு முன்னெடுக்கும் முறையற்ற சாதிவாரி கணக்கெடுப்பு முறையைக் கண்டித்தும், அதில் உள்ள குளறுபடிகளை மக்களிடம் அம்பலப்படுத்தவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் தழுவிய மக்கள் விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள திட்டமிடப்படாத கேள்வி முறைகளால், ஓ.பி.சி சமுதாயத்தின் உண்மையான பலமும் எண்ணிக்கையும் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரதமருக்குக் கடிதம் எழுதியும் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது. தற்போதைய கேள்வித்தாள் முறையை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்துக் கட்சிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வெளிப்படையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘சாதிவாரிக் கணக்கெடுப்பில் முறைகேடு! OBC இடஒதுக்கீட்டுக்குப் பெருங்கேடு!’ என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்தப் பரப்புரை பயணம் வரும் செப்டம்பர் 17 அன்று சென்னையில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படுகிறது. தொடர்ந்து சென்னை, திண்டுக்கல், அரியலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர், ராணிப்பேட்டை வழியாகச் சென்று இறுதியாக ஈரோட்டில் நிறைவடைகிறது. டவுன் ஹால் கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு நேரடி செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)




