ஆரோவில்லில் ஸ்ரீ அரவிந்தர் – அன்னை வழியில் கல்வி: 154-வது ஜெயந்தி கருத்தரங்கம்

புதுச்சேரி: சர்வதேச நகரமான ஆரோவில்லில் உள்ள யுனிட்டி பெவிலியனில் (Unity Pavilion), ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ‘கல்வி குறித்து ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல பேச்சாளர்கள் நந்தினி செங்குப்தா மற்றும் அலோ பால் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் கல்விக் கோட்பாடுகள் என்பது வெறும் தகவல்களைக் கடத்துவது மட்டுமல்லாமல், மனம், உடல், உணர்ச்சிகள் மற்றும் உள் உணர்வை முழுமையாக வளர்க்கும் முழுமையான ஒருங்கிணைந்த கல்வியை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒவ்வொரு தனிநபரும் தங்களின் உள்ளார்ந்த திறனைக் கண்டறிந்து வெளிப்படுத்த ஏதுவான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஜெர்மன் தூதரகத் தலைவர் (German Consul General) மற்றும் ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் ஜெயந்தி எஸ். ரவி ஐ.ஏ.எஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்கள் கல்வி, ஆரோவில் நகரின் தொடர் வளர்ச்சி மற்றும் அதன் தொலைநோக்குப் பார்வை குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஆரோவில் வாசிகள் மற்றும் கல்வியாளர்கள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.



