புதுச்சேரி

வருமானத்திற்கு மீறிய சொத்து வழக்கு: அசோக் ஆனந்தன், ஆனந்தன் ஆகியோருக்கு உயர் நீதிமன்றத்தில் விடுதலை

அசோக் ஆனந்தன் மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது தொடரப்பட்ட வருமானத்திற்கு மீறிய சொத்து வழக்கில், இவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் 2018 அக்டோபர் 30ஆம் தேதி, அசோக் ஆனந்தன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் அறியப்பட்ட வருமானத்தை விட ரூ.3.75 கோடி அளவுக்கு அதிக சொத்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டி, ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்திருந்தது. சிபிஐ சார்பில், இவர்களின் சொத்து-வருமான விகிதம் ஆரம்பக் கணக்கீட்டில் 255.93% என்றும், பின்னர் நீதிமன்றம் 110.59% என்றும் கருதியது. இதை அடிப்படையாகக் கொண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி, இருவரது சொத்துக்கள், வருமானங்கள், வங்கிக் கணக்கு, வர்த்தகச் செயற்பாடுகள், குடும்ப சொத்து விவரங்கள் ஆகியவற்றைப் புதிதாக மதிப்பீடு செய்தபோது, அதிக சொத்து சுமார் 5.60% மட்டுமே இருப்பதாகக் கணக்கிட்டார்.

“அறியப்பட்ட வருமானத்தை விடக் கணிசமான அளவு அதிக சொத்து வைத்திருக்கிறார்கள்” என்ற சிபிஐ குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும், குற்றத்தை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்களை வழக்குத் தரப்பு வைக்கவில்லை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அதன்படி, புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, அசோக் ஆனந்தன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் மீதிருந்த ஊழல், வருமானத்திற்கு மீறிய சொத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை அளிக்கப்பட்டது.

2018ல் தொடங்கிய தண்டனை, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம், குடும்பத்தின் மீதிருந்த ஊழல் குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக இந்த வழக்கை எதிர்கொண்டு வந்த அசோக் ஆனந்தன் குடும்பத்திற்கு இந்த விடுதலைத் தீர்ப்பு பெரும் நிம்மதியைக் கொடுத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன