ஆரோவில் அருள்வழி மையத்தில் ‘ஒருமை யோகா’ பயிற்சி முகாம்: தியானம், பிராணாயாமப் பயிற்சிகள் அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த ஆரோவில் அருள்வழி கல்வி மையம் (Arulvazhi Education Center) சார்பில் ‘ஒருமை யோகா’ (Yoga of Oneness) என்ற சிறப்பு ஆன்மீக யோகா, மூச்சுப்பயிற்சி மற்றும் தியான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறுகிறது. உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் அக விழிப்புணர்வை வளர்த்தெடுக்கும் கூட்டு முயற்சியாக இந்த ஒருங்கிணைந்த பயிற்சித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமர்வுகளில் பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் நேரடிப் பயிற்சிகளை வழங்க உள்ளனர். அதன்படி, யோகாசனப் பயிற்சிகளை முத்துக்குமாரியும், சுவாசத்தை சீராக்கும் பிராணாயாமப் பயிற்சியை மல்லிகாவும் வழிநடத்துகின்றனர். ஆனாபான தியானப் பயிற்சியை வலேரியும், ஆழ்ந்த மன தளர்வுக்கான யோக நித்ரா பயிற்சியை ரேவதியும், ஸ்ரீஅரவிந்தரின் சாவித்திரி நூலின் வாசிப்பு அமர்வை தனலட்சுமியும் ஒருங்கிணைக்கின்றனர். ‘அனைத்து வாழ்க்கையும் யோகமே’ மற்றும் ‘இறைவனின் தொடுதல் இருந்தால் அனைத்தும் சாத்தியமே’ என்ற ஸ்ரீஅரவிந்தரின் தத்துவங்களை மையமாகக் கொண்டு இந்த அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்து யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு அக அமைதியை உணர இது ஒரு நல்வாய்ப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
