புதுச்சேரி

சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி புதுச்சேரி பி.டி.டி.சி. அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி, அக். 23: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் (PTDC) பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்குநர் அலுவலகம் முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சூழலில், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்கி பணிகளை வரன்முறைப்படுத்தி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இயக்குநர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், ‘நாங்கள் பல ஆண்டுகளாகக் குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். பலமுறை கோரிக்கை விடுத்தும் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்டமாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்’ என எச்சரித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன