மதுரையில் 28 ஏழை மாணவர்களுக்கு ரூ.2.52 லட்சம் கல்வி உதவித்தொகை: எம்.எல்.ஏ. ஊதியத்தில் இருந்து வழங்கிய விஜய் அன்பன் கல்லாணை!

மதுரை: மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ‘தளபதி விஜய் கல்வி உதவிக் கரம்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
மதுரை அழகர் கோயில் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ. விஜய் அன்பன் கல்லாணை தனது சொந்த சட்டமன்ற உறுப்பினர் ஊதிய நிதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் 28 ஏழை மாணவ, மாணவிகளுக்கு தலா கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.2,52,000-க்கான காசோலைகளை அமைச்சர் முன்னிலையில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக் கனவுகள் எந்தத் தடையுமின்றி நிறைவேற வேண்டும் என்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் களப்பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு மாணவ, மாணவியின் படிப்பும் தடைபடக்கூடாது என்ற நோக்கில் எம்.எல்.ஏ. தனது சொந்த ஊதியத்திலிருந்து இத்தகைய சீரிய முன்னெடுப்பைச் செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வியே சமூக முன்னேற்றத்திற்கான உண்மையான அடித்தளம் என்பதை உணர்ந்து, இளைய தலைமுறையின் எதிர்காலத்தை வளமாக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வ நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

