விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குக: புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி, அக். 22: புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், நியாயவிலைக் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் மற்றும் காந்தி வீதி அமுதசுரபி தலைமை அலுவலகம் எதிரே இந்த போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
குடிமைப் பொருள் வழங்கல் துறை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் உழவர்கரை கமிட்டி செயலாளர் ராம்ஜி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக் குழு உறுப்பினர் சஞ்சய்சேகரன் மற்றும் உழவர்கரை கமிட்டி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், மணிமாறன், ராமலிங்கம், சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தோழர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதேபோன்று காந்தி வீதியில் நடைபெற்ற மற்றொரு ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். கட்சியின் மூத்த தலைவர் முருகன் போராட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
நிறைவாக மாநில செயலாளர் ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சீனுவாசன், மாநிலக் குழு உறுப்பினர் மதிவாணன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் போது, வெளிச்சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசியைக் கட்டுப்படுத்த அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பண்டங்களை ரேஷன் கடைகள் வாயிலாக மலிவு விலையில் தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஏழை எளிய மக்களுக்கு நிலுவையில் உள்ள 9 மாத இலவச அரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், பொது விநியோக முறையைச் சீர்குலைக்கும் வகையில் கொண்டுவரப்படும் டிஜிட்டல் காயின் முறையைக் கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
