புதுச்சேரி: முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை – அமைச்சர் வழங்கினார்!
புதுச்சேரி, அக்.22: புதுச்சேரி அரசு முப்படை நலத்துறை சார்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமரணமடைந்த, மறைந்த முன்னாள் ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளின் வாரிசுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்த முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் கல்வி நலனை உறுதி செய்யும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றவர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முப்படை நலத்துறை அமைச்சர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட தகுதியான மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், மாணவ மாணவிகள் உயர்கல்வியில் மேலும் பல சாதனைகளைப் படைத்து புதுச்சேரிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
