தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்; ஒட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் மோடியால் 10 இடங்கள் கூட வெல்ல முடியாது: நாராயணசாமி காட்டம்
புதுச்சேரி, அக். 22: புதுச்சேரியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கில், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது என்று முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி உரையாற்றினார். புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், பொதுச்செயலாளர்கள் இளையராஜா, சங்கர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்தபாபு, நடராஜன் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பிரபுராஜ் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு, கட்சியின் அடிப்படைக் கொள்கைகள், எதிர்கால மக்கள் பணிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. தொடர்ந்து மேடையில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அரசியலிலும் தேர்தலிலும் வெற்றி, தோல்விகள் மாறி மாறி வருவது சகஜமானது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் கட்சியின் மரியாதையையும் சுயமரியாதையையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் எப்போதும் மக்கள் நலப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பாஜகவின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், தேர்தல் ஆணைய நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்வதாகவும், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கி எதிர்க்கட்சிகளை பாஜக வீழ்த்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்தினால் பிரதமர் நரேந்திர மோடியால் 10 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று நாராயணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
