புதுச்சேரி

புதுச்சேரியில் வீடுகளில் சோலார் அமைக்க ரூ.10 கோடி மானியம்: அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி, 18/10/2026: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களை (Rooftop Solar) அமைக்கும் மின் நுகர்வோருக்கு, புதுவை அரசின் கூடுதல் நிதிப்பங்கான ரூ.30,000 வழங்கும் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட சோலார் அமைப்புகளை நிறுவிய நுகர்வோருக்கு இந்த மானியத் தொகை நேரடியாக விடுவிக்கப்பட்டு வருகிறது.

காராமணிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உள்துறை மற்றும் மின்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கலந்து கொண்டு இத்திட்டத்தின் கீழ் மானியத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பி. ராஜவேலு மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் 3 கிலோவாட் மின் உற்பத்தி சாதனங்களை அமைத்துள்ள 3,333 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.10 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் ‘பிரதமரின் சூர்ய கர்: இலவச மின்சார திட்டம்’ (PM Surya Ghar: Muft Bijli Yojana) கீழ், 3 கிலோவாட் சோலார் அமைக்கும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் மானியமாக ரூ.78,000 வழங்கப்படுகிறது. இதனுடன் தற்போது புதுச்சேரி அரசின் பங்களிப்பாக ரூ.30,000 சேர்க்கப்படுவதால், பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,08,000 நேரடி மானியம் கிடைக்கிறது. இதேபோல் 1 கிலோவாட் அமைப்பிற்கு மத்திய அரசின் ரூ.30,000 மற்றும் புதுவை அரசின் ரூ.10,000 என மொத்தம் ரூ.40,000 மானியமும்; 2 கிலோவாட் அமைப்பிற்கு மத்திய அரசின் ரூ.60,000 மற்றும் புதுவை அரசின் ரூ.20,000 சேர்த்து மொத்தம் ரூ.80,000 மானியமும் வழங்கப்படுகிறது.

மின்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இதுவரை 8,135 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 6,452 வீடுகளில் சோலார் கட்டமைப்புகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு, 23.32 மெகாவாட் மின் உற்பத்தி திறன் எட்டப்பட்டுள்ளது. இதுவரை 5,295 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ.40.99 கோடி மானியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரி முழுவதும் 80 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் (Vendors) மூலமாக சோலார் கட்டமைப்புகள் துரிதமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

வீடுகளில் நிறுவப்படும் 3 கிலோவாட் சோலார் சாதனம் மூலமாக ஆண்டுக்கு சுமார் 4,500 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த சோலார் சாதனங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேல் தடையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயனாளிகள் எளிய முறையில் பலனடைய ஏதுவாக வெறும் 5.75% குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடனுதவியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் சுமார் 13,000 நுகர்வோரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே 79 அரசு அலுவலக கட்டடங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு பசுமை மின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன