புதுச்சேரி

புதுச்சேரியில் டாக்டர் அப்துல் கலாம் 95-வது பிறந்தநாள்: ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மலரஞ்சலி!

புதுச்சேரி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், மறைந்த மாபெரும் விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அறிவியல் மையம் மற்றும் கோளரங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

லாஸ்பேட்டை அறிவியல் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ந. ரங்கசாமி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு டாக்டர் அப்துல் கலாமின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி தங்களது மரியாதையைச் செலுத்தினர். தொடர்ந்து அமைச்சரவை சகாக்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளும் கலாம் அவர்களின் உருவப்படத்திற்கும் சிலைக்கும் மரியாதை செய்தனர்.

இந்நிகழ்வில் புதுச்சேரி அமைச்சர் சிவக்கொழுந்து, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அறிவியல் மையப் பணியாளர்கள் பலரும் உடனிருந்து மரியாதை செலுத்தினர். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் கலாமின் தன்னலமற்ற பங்களிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான அவரது தொலைநோக்குச் சிந்தனைகள் குறித்து இந்நிகழ்வின்போது தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.

இந்திய இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்த டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் நாடெங்கும் இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், புதுச்சேரி அறிவியல் மையத்தில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன