மலேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி: தேனி மாணவர் பாரதிதாசனை நேரில் பாராட்டி வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் உயர்நிலை ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சர்வதேச அரங்கில் கல்வி ஆராய்ச்சியில் முத்திரை பதித்து வரும் எளிய குடும்பத்துப் பின்னணி கொண்ட மாணவரை துணை முதல்வர் வெகுவாகப் பாராட்டினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் பாரதிதாசன். மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து தனது தொடர் முயற்சியாலும் கல்வித் திறனாலும் உயர்ந்து, தற்போது மலேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட அளவிலான சர்வதேச ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். இவர் அண்மையில் நாட்டின் முதன்மை மருத்துவ நிறுவனமான டெல்லி எய்ம்ஸ் (AIIMS) வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான முக்கிய ஆராய்ச்சிக் கருத்தரங்கில் பங்கேற்று, தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து உரையாற்றிவிட்டுத் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மாணவர் பாரதிதாசன் நேரில் சந்தித்தார். அப்போது, பன்னாட்டுத் தரத்திலான கல்வி மையத்தில் தான் மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகள், டெல்லி எய்ம்ஸ் ஆய்வரங்க அனுபவங்கள் மற்றும் சர்வதேச அரங்கில் கல்வி கற்கும் சூழல் குறித்து துணை முதல்வரிடம் விளக்கிக் கூறினார்.
மாணவரின் கல்வி ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது எதிர்கால ஆய்வுகளும் கல்விப் பயணமும் மேலும் பல வெற்றிகளை ஈட்ட உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், திராவிட மாடல் ஆட்சியில் அடித்தட்டு மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் லட்சியக் கனவுகள் மெய்ப்படவும், அவர்கள் பன்னாட்டு அளவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைக்கவும் அரசு எப்போதும் அனைத்து வகையிலும் உறுதுணையாக நிற்கும் என்று தெரிவித்தார்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)


