மடுகரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்: இருவர் கைது
புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடுகரை–சிறுவந்தாடு சாலை சந்திப்பில் நடந்த வாகன சோதனையில், காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு அதிரடிப்படை காவல் ஆய்வாளர் கணேஷ், நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் கீர்த்திவர்மன், துணை ஆய்வாளர் வீரபுத்திரன் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் அடங்கிய கூட்டுக் குழு, சூரமங்கலத்திலிருந்து மடுகரை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டது. அதில் 24 சாக்குகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவர்கள் மடுகரையைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது மற்றும் பெங்களூருவில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பது தெரியவந்தது. பெங்களூருவில் உள்ள இடைத்தரகர் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி, புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து ₹1.32 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ₹2.39 லட்சம் ரொக்கம், கார் மற்றும் இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.