புதுச்சேரி

புதுச்சேரியில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலர் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வரும் நான்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளை வழங்கி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசின் தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான் வெளியிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் துணைநிலை ஆளுநரின் உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், பயிற்சி மற்றும் நலப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக (SSP Training & Welfare) பணியாற்றி வந்த ராஜேந்தர் குமார் குப்தா ஐபிஎஸ் (AGMUT:2014), புதுச்சேரி காவல் தலைமையகத்தின் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக (SSP Headquarters) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி புதுச்சேரி நிர்வாகத்தில் பணியில் இணைந்த தீபிகா ஐபிஎஸ் (AGMUT:2018), போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக (SSP ANTF & Coastal Security) நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று நிர்வாகத்தில் இணைந்த சிக்கந்தர் சிங் ஐபிஎஸ் (AGMUT:2020), பயிற்சி மற்றும் நலப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடிப்படைப் பயிற்சியை (இரண்டாம் கட்டம்) வெற்றிகரமாக முடித்து புதுச்சேரி நிர்வாகத்தில் இணைந்த அனுராக் சோப்ரா ஐபிஎஸ் (AGMUT:2021), புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளராக (SP Cyber) பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு ஆணை எண் 88-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன