பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை:
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதியுதவியுடன் சுமார் ரூ.21 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சதுப்பு நிலத்தைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பணிகள் நடைபெறும் பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகர் பகுதிக்கு நேரில் சென்ற அன்புமணி ராமதாஸ், அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயற்கையான சதுப்பு நிலப் பகுதியைப் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கு மாறாக, அங்கு கான்கிரீட் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது இயற்கை சூழலை முற்றிலும் சீர்குலைக்கும் என்று குற்றம்சாட்டினார். சதுப்பு நிலத்தின் இயல்பான நீரோட்டத்தை இத்தகைய தடுப்புச் சுவர்கள் தடுத்து நிறுத்தும் என்றும், இதன் காரணமாக மழைக்காலங்களில் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பேரழிவை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உலக வங்கிக் கடனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த திட்டப் பணிகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து, சதுப்பு நிலத்தின் இயற்கை வளத்தையும் நீர் தேங்கும் திறனையும் பாதிக்காத வகையில் பணிகளை மாற்றியமைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தினார். சதுப்பு நிலப் பகுதிகளைக் கான்கிரீட் மயமாக்காமல் இயற்கையான சூழலில் மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)





