முதலியார்பேட்டையில் வள்ளலார் மடம் 78-ஆம் ஆண்டு விழா: பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி புகழாரம்!

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் உள்ள ராமலிங்க சுவாமிகள் மடத்தின் 78-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வள்ளலார் திருச்சபையின் நிறுவனரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில ஆலோசகருமான ஜெ. கோபி என்ற கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி பேசுகையில், “வள்ளலார் திருச்சபையின் நிறுவனர் கோபி அவர்கள், தனது வாழ்வில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் வந்தபோதிலும் கூட, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தனது சொந்த இடத்தில் முதலியார்பேட்டையில் இந்த திருச்சபையை நிறுவியுள்ளார். தனது தந்தையார் வழியில் தொடர்ந்து தினமும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி மகத்தான ஆன்மிக மற்றும் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.”
மேலும் அவர் பேசுகையில், “வடலூரில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, அதன் புனிதத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என முதன்முதலில் வள்ளலார் ஆன்மிக செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து மருத்துவர் அய்யா அவர்களிடம் தைலாபுரம் தோட்டத்தில் கோரிக்கை வைத்தவர் கோபி அவர்கள்தான். மருத்துவர் அய்யா கொடுத்த வலுவான அழுத்தத்தின் காரணமாகவே அப்பணி தடுத்து நிறுத்தப்பட்டு, அங்குள்ள இயற்கையான நிலப்பரப்பு மாறாமல் பாதுகாக்கப்பட்டது. இது புதுச்சேரி வள்ளலார் அன்பர்களுக்கும் திரு. கோபி அவர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, இந்த அறப்பணிகளுக்கு உற்றதுணையாக விளங்கும் அவரது குடும்பத்தினருக்கும், மகன்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழ் அறிஞர்கள், பாமக மாநில துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், சரவணன், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி பன்னீர்செல்வம், வன்னியர் சங்க இளைஞரணி பொறுப்பாளர் மணிரத்தினம் உள்ளிட்ட ஏராளமான ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாகப் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.



