காமராஜ் நகர் எழில் நகரில் மழைநீர் தேக்கம், குப்பை பிரச்சினை: களத்தில் இறங்கி ஆய்வு செய்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட எழில் நகர் 8-வது தெருவில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முன்வைத்த புகார்களைத் தொடர்ந்து, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அப்பகுதிக்கு நேரில் சென்று தீவிர கள ஆய்வு மேற்கொண்டார்.
எழில் நகர் பகுதியில் முறையான சாலை வசதிகள் இல்லாதது, காலி மனைகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவது மற்றும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் குறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் அவரிடம் முறையிட்டனர். பொதுமக்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்த அவர், உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள கிரீன் வாரியர்ஸ் (Green Warriors) அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி தூய்மைப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், பொதுமக்கள் குப்பைகளை எளிதாகக் கொட்டும் வகையில் தேவையான இடங்களில் புதிய குப்பைத் தொட்டிகளை வைக்க ஏற்பாடுகள் செய்யுமாறும், இப்பணிகளை ஒருங்கிணைக்க தமது அலுவலக ஊழியர்களுக்கும் உடனடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இந்த கள ஆய்வின்போது, லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாகப் பொதுச் செயலாளர் ராம்குமார், பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரைசாமி, வழக்கறிஞர் பிரபாகரன், மாநிலச் செயலாளர்கள் ரவி ராஜாராம், அனிதா, தொகுதித் தலைவர் கோகுல கண்ணன், தொகுதிச் செயலாளர் சுரேஷ் மற்றும் வார்டு, பூத் நிர்வாகிகள் பலர் உடனிருந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.



