தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் காங்கிரஸ் தீவிர கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: தேர்தல் ஜனநாயகப் படுகொலையை நடத்தியதாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீவிர கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் திரண்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகக் கடுமையான முழக்கங்களை எழுப்பினர். டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுத்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது ஒன்றிய பாஜக அரசு அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் டாக்டர் ஏ. செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், மாநில இயக்கச் சீரமைப்புத் திட்டக்குழுத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தாரகை கத்பட் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் முன்னின்று தலைமை தாங்கினர். தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் கடுமையாகச் சாடினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் டாக்டர் ரூபி ஆர். மனோகரன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தணிகாசலம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், பல்வேறு முன்னணி அமைப்புகள், பிரிவுகள் மற்றும் துறைகளின் தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.


