புதுச்சேரியில் வாக்காளர்களை துணை ராணுவத்தினர் அச்சுறுத்துகின்றனர்: காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் பகிரங்க குற்றச்சாட்டு!
புதுச்சேரி, அக். 6:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களை துணை ராணுவப் படையினர் அச்சுறுத்துவதாக காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திலகர் நகர் மற்றும் மோகன் நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிப்பதற்காக, வி.வி.பி. நகர் மெயின் ரோடு வழியாக தொழிலாளர் துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப் படையினர், பொதுமக்களின் வாகனங்களை அவ்வழியே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி, மாற்றுப் பாதையில் செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் துணை ராணுவத்தினர் நடந்துகொள்வதாகவும், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் வேட்பாளர் விநாயகம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும் பதற்றமும் நிலவியது. பின்னர் காவல்துறையினர் வேட்பாளரையும் பொதுமக்களையும் சமாதானப்படுத்தி, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்ல அனுமதித்தனர். மேலும், தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

