புதுச்சேரியில் சேவா ஜோதி யாத்திரை: 25 ஆண்டுகள் மக்கள் சேவையில் பிரதமர் மோடி – சிறப்பு ரத்ததான முகாம் உற்சாகம்!

புதுச்சேரி: குஜராத் மாநில முதலமைச்சராகவும், தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பிரதமராகவும் பொறுப்பு வகித்து, மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையை போற்றும் வகையில், புதுச்சேரியில் ‘சேவா ஜோதி யாத்திரை’ மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
தலைநகர் டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய சிறப்பு உரை, புதுச்சேரியில் நடைபெற்ற சேவா ஜோதி யாத்திரை நிகழ்ச்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, “என்னை தாழ்த்தியவர்கள் அதன் மூலம் எப்படி மேலும் உத்வேகத்துடன் எழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்; ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நல்லாசியும் அன்பும் தான் என்னை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு சேர்த்துள்ளது” என்று உருக்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த நெகிழ்ச்சியான உரை தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, மக்கள் சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மாபெரும் தன்னார்வ ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி மருத்துவக் குழுவினரின் மேற்பார்வையில் இளைஞர்களும் மகளிரும் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
ரத்ததானம் செய்த தன்னார்வலர்களை நேரில் சந்தித்து பாராட்டிய தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலப்பணிகளை முன்னுதாரணமாகக் கொண்டு இதுபோன்ற சமுதாய நற்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இந்த சேவா ஜோதி யாத்திரை மற்றும் ரத்ததான முகாம் புதுவை மக்களிடையே மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
