“வளர்ந்த இந்தியா – 2047” ஓவியப் போட்டியில் ரூ.1 லட்சம் முதல் பரிசு: கலைஞர் வி.கே. துரைக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு!

புதுச்சேரி:
மத்திய இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை இணைந்து நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வென்ற சிற்பியும் ஓவியக் கலைஞருமான திரு. வி.கே. துரை, புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA) மற்றும் புதுச்சேரி அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறை சார்பில், கடந்த ஆண்டு “வளர்ந்த இந்தியா – 2047” (Viksit Bharat – 2047) என்ற தலைப்பில் மாநில அளவிலான பிரம்மாண்ட ஓவியப்போட்டி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடத்தப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முன்னணி மற்றும் வளரும் ஓவியக் கலைஞர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் நடுவர் குழுவினரால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற வண்ணமயமான பரிசளிப்பு விழாவில் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல சிற்பியும் ஓவியக் கலைஞருமான திரு. வி.கே. துரை அவர்களின் ஓவியம் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மாநில அளவில் முதல் பரிசான ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்த கலைஞர் திரு. வி.கே. துரை அவர்கள், மாண்புமிகு புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது அமைச்சரிடம் தனது கலைப்பயணம் மற்றும் வெற்றி குறித்து பகிர்ந்துகொண்டார். சாதனையைப் பாராட்டிய உள்துறை அமைச்சர், புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ள கலைஞருக்குப் பொன்னாடை அணிவித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க கலைகளைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுமாறும் ஊக்கமளித்தார்.



