என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்: திமுக வேட்பாளர் சேதுசெல்வத்திற்கு வாய்ப்பு கேட்டு எஸ்.ஜெகத்ரட்சகன், இரா. சிவா வேண்டுகோள்!

புதுச்சேரி:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மற்றும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொகுதிக்குட்பட்ட 31 பூத்களிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மோகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் இரா.சிவா ஆகியோர் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பேசுகையில், முதலமைச்சர் தொகுதி என்று பெயர் பெற்ற தட்டாஞ்சாவடி இன்று எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி சீர்கெட்டு போயுள்ளதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், தங்களுக்கு வாக்களித்த மக்களைப் புறந்தள்ளிவிட்டு மங்கலம் தொகுதியைத் தேர்ந்தெடுத்துச் சென்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கும், கடந்த தேர்தலில் தங்களை டெபாசிட் இழக்கச் செய்த வேட்பாளரை தற்போது இரவலாகப் பெற்று களமிறக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கூட்டணிக் கட்சிக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் மற்றும் தொகுதி மக்களை கைவிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றும்; தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளான சுகாதாரமான குடிநீர், தரமான சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மக்கள் தொண்டன் சேதுசெல்வத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பின்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் மருத்துவர் ஆ.இலட்சுமணன் எம்.எல்.ஏ., மருத்துவர் பொன் கௌதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.செந்தில்குமார், வே.கார்த்திகேயன், அ.செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், கௌதம் திராவிடமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.அனிபால்கென்னடி, எல்.சம்பத், பூ.மூர்த்தி, நந்தா டி.சரவணன், தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ரோ.நித்திஷ் மற்றும் கண்டமங்கலம் சேர்மன் வாசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



