விஜய்யின் தேர்தல் வெற்றிக்கு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமே காரணம்: புதுவை பாஜக தலைவர் ராமலிங்கம்
புதுச்சேரி, செப். 30: எந்தவித பணமும் கொடுக்காமல் விஜய் வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர். (SIR) எனப்படும் தேர்தல் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த முறையே முக்கியக் காரணம் என்று புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி தங்களின் தொடர் தேர்தல் தோல்விகளை மறைப்பதற்காக, தலைமை தேர்தல் ஆணையருடன் மற்ற ஆணையர்கள் முரண்பட்டுள்ளதாக ஒரு தவறான மாயையை உருவாக்க முயற்சிக்கிறது. போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி முறைகேடாக வாக்குகள் பெற்று வந்த சூழலை மாற்றவே எஸ்.ஐ.ஆர். முறை கொண்டுவரப்பட்டது. இந்த முறைகேடுகள் களையப்பட்டதால்தான், தமிழகத்தில் ஒரு பைசா கூட செலவழிக்காமல் விஜய் வெற்றி பெற முடிந்தது” என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், “விஜய் மாற்றாந்தோட்டத்து மல்லிகையாக இருந்தாலும் மணக்கட்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதே அவரது வெற்றிக்கு வித்திட்டது. கேரளாவில் காங்கிரஸ் வென்றபோது தேர்தல் ஆணையத்தை குறை கூறாதவர்கள், மற்ற இடங்களில் தோற்கும்போது மட்டும் பழிசுமத்துகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையிலான வெளிப்படையான சீர்திருத்த நடவடிக்கைகளையே மக்கள் ஆதரிக்கின்றனர்” என்று கூறினார்.


