தமிழ்நாடு

புதுச்சேரியில் கமிஷன் ஆசை காட்டி ரூ.2 கோடி பறிக்க முயற்சி: ரூ.88 லட்சத்துடன் கும்பல் எஸ்கேப்; சிக்கிய இருவரிடம் ஐடி விசாரணை!

புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த பஞ்சகாவிய விளக்கு தயாரிப்பு தொழில் செய்யும் வெங்கடேஷ் (43) மற்றும் அவரது வியாபார நண்பரான நேரு வீதி துணிக்கடை உரிமையாளர் மகேஷ் ஆகியோரிடம், கூடுதல் கமிஷன் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.2 கோடி பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவர், தன்னிடம் ரூ.1 கோடி கொடுத்தால் 3 மணி நேரத்தில் 8 சதவீத கமிஷனுடன் பணத்தை வங்கிக் கணக்கிற்குத் திருப்பி அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய வெங்கடேஷ், தனது குடும்ப நகைகளை அடமானம் வைத்து ரூ.1.10 கோடியும், நண்பர் மகேஷ் வட்டிக்கு வாங்கிய ரூ.90 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியை தயார் செய்தனர். தொடர்ந்து, கொசப்பாளையம் தி.ஆர். நகரில் உள்ள ஒரு தற்காலிக அலுவலகத்திற்கு பணப்பைகளுடன் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு ரசீது என்ற பெயரில் வெட்டப்பட்ட ரூ.100 நோட்டின் பாதியை இணைத்துக் கொடுத்துவிட்டு, 3 பெண்கள் உட்பட சிலர் பணப்பைகளுடன் நைசாக நழுவ முயன்றனர். சந்தேகம் அடைந்த வெங்கடேஷும் மகேஷும் அவர்களைத் தடுக்க முயன்றபோது, ஒரு பையில் இருந்த ரூ.88 லட்சத்தை பறித்துக்கொண்டு 5 பேர் தப்பியோடினர். மற்றொரு பையை வியாபாரிகள் பத்திரமாக மீட்டனர்.

சம்பவ இடத்திலேயே முத்து, தேவநாதன் ஆகிய இருவரைப் பிடித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஹவாலா பணப்பரிமாற்ற பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன