தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து நேரு எம்.எல்.ஏ தீவிர வாக்குச் சேகரிப்பு!
புதுச்சேரி, செப் 30: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து உருளையான்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் பணிகளை முன்னிட்டு, நேயம் மக்கள் கழக தலைவரும் உருளையான்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான ஜி.நேரு தலைமையில் மதச்சார்பற்ற சமூகநீதி முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் வி.வி.பி. நகர், கோரிமேடு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து கை சின்னத்திற்கு ஆதரவளிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குக் கோரினர்.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வி.வி.பி. நகரில் வசித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராமதாஸை காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். தட்டாஞ்சாவடி தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே சட்டமன்ற உறுப்பினர் நேரு பேசுகையில், புதுச்சேரியில் தற்போதைய ஆட்சியாளர்களின் தொடர் அலட்சியப் போக்கினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தினசரி கொலை, கொள்ளை மற்றும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் நிம்மதியற்ற சூழலில் வாழ்ந்து வரும் நிலையை மாற்றியமைக்க தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் இந்த இடைத்தேர்தலை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “சட்டமன்றத்தில் மக்களுக்காக உறுதியாகக் குரல் கொடுக்கக்கூடிய வலிமையான மக்கள் பிரதிநிதியாக காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் விளங்குவார். தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு அரசு மூலமாகச் சேர வேண்டிய நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி கிடைக்கப் பெற அவர் அயராது பாடுபடுவார். தேர்தல் நேரத்தில் சிலர் பணத்தைக் காட்டி வாக்குகளைப் பெற முயற்சிப்பார்கள். ஆனால் மக்கள் விழிப்புணர்வோடு சிந்தித்து, பண பலத்திற்கு அடிபணியாமல் மக்கள் சேவை ஆற்றக்கூடிய விநாயகத்தைத் தேர்ந்தெடுத்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பிரச்சாரப் பயணத்தின் போது மதச்சார்பற்ற சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு கை சின்னத்திற்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பினர்.

