புதுச்சேரி: பிறந்தநாள் பேனரை தானே முன்வந்து அகற்றிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன்; கட்சியினருக்கு முக்கிய வேண்டுகோள்!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் வைப்பதற்கு கடுமையான தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சட்டத்தை மதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன் தனது பிறந்தநாள் பேனரை தானே அகற்றிய சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் பிறந்தநாளையொட்டி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொகுதிக்குட்பட்ட பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பர பேனர்களை அமைத்திருந்தனர். பேனர் தடை சட்டம் அமலில் இருக்கும்போது, மக்கள் பிரதிநிதிகளின் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதையும், சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதையும் உணர்ந்த அன்பழகன், நேரில் சென்று உப்பளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தனது பிறந்தநாள் பேனரை தானாக முன்வந்து அகற்றினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி அரசு மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பேனர் தடை சட்டம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணமாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பேனரை தானே முன்வந்து அகற்றியதாக தெரிவித்தார். அரசு வகுத்துள்ள சட்ட திட்டங்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து தனது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த அன்பழகன், தனது பிறந்தநாளை முன்னிட்டு யாரும் பொது இடங்களில் பேனர்கள், கட்-அவுட்கள் அல்லது தோரணங்கள் அமைத்து பணத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அந்த நிதியை கொண்டு ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி பயனுள்ள வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.

