பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை
காரைக்கால்: காரைக்காலில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சுப்பிரமணியன் மீது காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சுப்பிரமணியன், அங்கு பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்புகார் தொடர்பாக ஏற்கனவே துறைரீதியான தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எஸ்.பி. சுப்பிரமணியன் தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் காரைக்கால் மகளிர் காவல் நிலையப் போலீசார் எஸ்.பி. சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



