புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் சாய்ந்து 5 வயது சிறுவன் பலி: எம்.எல்.ஏ நேரு தலைமையில் ஒதியஞ்சாலை காவல்நிலையம் முற்றுகை!

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் இரும்பு மின்கம்பம் விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவத்தை தொடர்ந்து, உரிய நடவடிக்கை மற்றும் இழப்பீடு கோரி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் ஒதியஞ்சாலை காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரை சாலைக்கு தனது பெற்றோருடன் வந்திருந்த பாஜல் என்ற 5 வயது சிறுவன் மீது அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு மின்கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அச்சிறுவன், உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனின் மறைவு குறித்து தகவலறிந்த உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நியாயம் மக்கள் கழக தலைவருமான நேரு என்கிற குப்புசாமி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து குறித்தும், காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ நேரு தலைமையில் பொதுமக்கள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் கடற்கரை பகுதி சிறுகடை வியாபாரிகள் திரண்டு ஒதியஞ்சாலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ந.ரங்கசாமி அரசு சார்பில் உரிய நிவாரண நிதி மற்றும் தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் நேரு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன