புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்கம்பம் விழுந்து சிறுவன் பலி: அண்ணா சிலையில் சாலை மறியல்; ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க திமுக சிவா வலியுறுத்தல்!

புதுச்சேரி, செப். 28: புதுச்சேரி கடற்கரை சாலையில் துருப்பிடித்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் அண்ணா சிலை சந்திப்பில் உறவினர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்கரை சாலையில் பொம்மை மற்றும் பலூன் வியாபாரம் செய்து வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரின் 5 வயது மகன் முகமது பாசில் மீது, எவ்விதக் காற்றும் இல்லாத நிலையிலும் முறையான பராமரிப்பின்றி துருப்பிடித்திருந்த மின்கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்திற்கு நீதி கோரி சிறுவனின் உறவினர்கள் அண்ணா சிலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நேரு எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர் இப்போராட்டத்தில் நேரில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே, இத்துயரச் சம்பவத்திற்கு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். மின்துறையின் அப்பட்டமான அலட்சியமே இத்தகைய விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அவர், இதனை வெறும் விபத்தாகக் கருதி முதல்வர் கடந்துவிடாமல், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன