புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: உங்களுக்காக உழைக்கும் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் – நேரு எம்.எல்.ஏ. பிரச்சாரம்

புதுச்சேரி, செப். 27:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக விநாயகம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழகத் தலைவருமான நேரு (எ) குப்புசாமி, திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாய்.சரவணன்குமார் ஆகியோருடன் இணைந்து தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட அவ்வை நகர், லாஸ்பேட்டை மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் நேரு, “தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக அரசுத் துறை நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாமல் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்துள்ளனர். புதிய ரேஷன் கார்டு, சிவப்பு நிற குடும்ப அட்டை பெறுதல், பெயர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணிகளுக்கு எம்.எல்.ஏ. கையொப்பம் பெற முடியாமல் மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.”

“மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் வழங்கப்படும் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, குடிசை மாற்று வாரிய நலத்திட்டங்களை தட்டாஞ்சாவடி மக்களுக்குப் பெற்றுத் தருவதில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் தொடர்ந்து முன்னின்று உழைத்து வருகிறார். எனவே மக்களுக்காக களத்தில் நிற்கும் அவருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன