புதுச்சேரி கடற்கரையில் துருப்பிடித்த மின்கம்பம் விழுந்து 5 வயது குழந்தை பலி: உடலை வாங்க மறுத்து பெற்றோர் கண்ணீர் போராட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் துருப்பிடித்த மின்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்ததில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இழப்பீடு மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என குழந்தையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் புதுச்சேரிக்கு புலம் பெயர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகளை விற்பனை செய்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை கடற்கரை பகுதியில் இவர்களது 5 வயது குழந்தை வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு பராமரிப்பின்றி துருப்பிடித்த நிலையில் இருந்த மின்கம்பம் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென முறிந்து குழந்தை மீது விழுந்தது. இதில் குழந்தையின் கழுத்துப் பகுதியில் பலத்த அடிபட்டு கழுத்து முறிந்ததில், அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் கடற்கரையில் இருந்த பொதுமக்கள் மற்றும் சக வியாபாரிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் நேரு, உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து சென்று உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இதனிடையே, அரசு நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள குழந்தையின் குடும்பத்தினர், புதுச்சேரி அரசு தகுந்த நிவாரண இழப்பீடு வழங்குவதோடு, துறைசார்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளிக்கும் வரை குழந்தையின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.