புதுச்சேரி

நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) வங்கிகள் இயங்கும் என அறிவிப்பு!

புதுச்சேரி, 24 செப்டம்பர் 2026:

வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (UFBU) சார்பில் வரும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சேவைகள் மூன்று நாட்களுக்குப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் புதுச்சேரி மாநில வங்கியாளர் குழு (SLBC – Indian Bank) முக்கிய பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது அத்தியாவசிய வங்கிப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்ளுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைநிறுத்த தினங்களில் ஏற்படும் பாதிப்பை ஈடுசெய்யும் நோக்கில், வரும் செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளும் வழக்கம்போல் செயல்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 25 மற்றும் செப்டம்பர் 27 ஆகிய தேதிகளில் தங்கள் நேரடி வங்கிப் பணிகளை முடித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், ரொக்கப் பணத் தேவைகளை முன்கூட்டியே பூர்த்தி செய்துகொள்ளுமாறும், அவசரத் தேவைகளுக்கு அருகிலுள்ள ஏ.டி.எம். (ATM) மையங்கள் மற்றும் இணைய வங்கி (Net Banking), மொபைல் பேங்கிங், யு.பி.ஐ (UPI) போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை முழுமையாகப் பயன்படுத்துமாறும் புதுச்சேரி மாநில வங்கியாளர் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன