புதுச்சேரி காமராஜ் நகரில் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பிளான் பவுண்டேஷன் (PLAN Foundation) மற்றும் ஸ்வர்ண லதா மதர்சன் டிரஸ்ட் (Swarn Lata Motherson Trust) ஆகியவை இணைந்து இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரத்தை நிறுவியுள்ளன. இதனை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் பார்வையிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கும் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்யும் நோக்கில் இந்த இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், பிளான் பவுண்டேஷன் திட்டத் தலைவர் ஜெயபாரதி, உதவி அதிகாரி சரவணன், கள அலுவலர்கள் சதீஷ், பிரான்சிஸ் பெனடிக் ஆகியோர் பங்கேற்று இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும், லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர்கள் டாக்டர் துரைசாமி, வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். நகர்ப்புறக் கழிவுகளை எளிதாக இயற்கை உரமாக மாற்றி மரங்களுக்கும் தோட்டங்களுக்கும் பயன்படுத்த இந்த முயற்சி பெரிதும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


