புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளையின் இலவச UPSC பயிற்சி வகுப்பு: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி:
புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச UPSC குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா புதுவைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்புகளை முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பயிற்சியில் இணைந்த மாணவ, மாணவிகளுக்கு UPSC தேர்வுக்கான பாடப் புத்தகங்களை வழங்கி, அரசுப் பணிகளில் சாதிக்கும் வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மார்டின் அறக்கட்டளையின் நிர்வாகி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஏஸ் (ACE) கல்விக் குழுமத்தின் நிறுவனர் திருமதி அபிநயா அரவிந்தன், புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் முத்து, எல்.ஜே.கே (LJK) நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


