காரைக்கால்

காரைக்காலில் நிலக்கரி சரக்கு ரயிலுக்காக அரை மணி நேரம் வெயிலில் காத்திருந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்!

காரைக்கால்: காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயத்தின் கார், அதானி துறைமுக நிலக்கரி சரக்கு ரயிலுக்காக ரயில்வே கேட்டில் சுமார் அரை மணி நேரம் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பட்டினச்சேரி மீனவ கிராம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் திரும்பியபோது, பட்டினச்சேரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. காரைக்கால் அதானி தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டதால், அமைச்சரின் வாகனம் மற்றும் அவருடன் வந்த வாகனங்கள் கடும் வெயிலில் சுமார் அரை மணி நேரம் அங்கேயே காத்திருக்க நேரிட்டது.

காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட முறை நிலக்கரி சரக்கு ரயில்கள் சென்று வருவதால், நகரப் பகுதியில் உள்ள மூன்று ரயில்வே கேட்டுகளும் அடிக்கடி மூடப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இதில் அடிக்கடி சிக்கித் தவித்து வருகின்றன. தற்போது உள்துறை அமைச்சரே சரக்கு ரயிலுக்காக காத்திருந்த நிலையில், காரைக்கால் நகரப் பகுதி ரயில்வே கேட்டுகளுக்கு விரைந்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன