புதுச்சேரி

புதுச்சேரியில் மருத்துவ மாணவியை நடுரோட்டில் வழிமறித்து காதல் டார்ச்சர்: வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை நடுரோட்டில் வழிமறித்து, காதலிக்குமாறு மிரட்டி டார்ச்சர் செய்த வாலிபர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

வில்லியனூர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் நாள்தோறும் கல்லூரிக்கு சென்று வரும் வேளையில், அதே பகுதியைச் சேர்ந்த பொறையாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகேஷ் (24) என்ற வாலிபர் மாணவியைப் பின்தொடர்ந்து வந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்காவிட்டால் உயிரோடு விடமாட்டேன் என கூறி தொடர்ந்து மிரட்டலும் விடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி மாணவி கல்லூரி முடிந்து வில்லியனூர் விவேகானந்தா பள்ளி அருகே நடந்து வந்தபோது, அங்கு வந்த முகேஷ் அவரை வழிமறித்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, காதலிக்குமாறு தகராறு செய்துள்ளார். மாணவியின் கூச்சலைக் கேட்டு அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து வந்து முகேஷை தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தனது குடும்பத்தாரிடம் நடந்த விவரங்களை கூறவே, மாணவியின் தந்தை வில்லியனூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் முகேஷ் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன