புதுச்சேரி இசிஆரில் பயங்கரம்: பிரபல ரவுடி ஆனந்த் ஓட ஓட விரட்டிப் படுகொலை; 7 பேர் கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி, செப். 18:
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (33). இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்படப் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை (இ.சி.ஆர்.) வழியாகச் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட மர்மக் கும்பல், ஆனந்தின் வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளியது.
வாகனத்தை விட்டுவிட்டுத் தப்பியோட முயன்ற ஆனந்தை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், நடுரோட்டில் அவரைச் சுற்றி வளைத்துக் கொடூரமாகச் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய இந்த பயங்கரக் கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாஸ்பேட்டை போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள், ஆனந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். கடந்த ஆண்டு நவீனா கார்டன் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரமுகர் விக்கி கொலை வழக்கில் ஆனந்த் முக்கிய குற்றவாளி என்பதால், பழிக்குப்பழி நடவடிக்கையாக இந்த படுகொலை அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

