பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: தவெக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

சென்னை: தமிழின் பெருமையை உலகறியச் செய்த தலைசிறந்த தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வாயிலாக உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். தமது நகைச்சுவை ததும்பும் பேச்சாலும், ஆழமான தமிழ்ப் புலமையாலும் சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் சேர்த்தவர் அவர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்கு மகத்தானது என்று குறிப்பிட்ட விஜய், பேராசிரியரின் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தனது ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.


