அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: வழக்கறிஞர் காஜா மொய்தீன் பேட்டி!
புதுச்சேரி: தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நான்கு ஆண்டுகள் கழித்துப் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் காஜா மொய்தீன் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அமைச்சர் மரிய வில்சன் தரப்பு, கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் பென்டிரைவ் நகல்களைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர் தரப்பின் பதில் வாதங்களுக்காக செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் காஜா மொய்தீன் பேசுகையில், “2022-ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்திற்கு, 4 ஆண்டுகள் கழித்து உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமரசப் பேச்சுவார்த்தையின் போது எதிர் தரப்பினர் முன்வைத்த அதீத கோரிக்கைகளை ஏற்க முடியாததால், மறைமுக சக்திகளின் தூண்டுதலால் இந்த பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சட்டப்பிரிவு 239-ன் கீழும், ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி பிரிவு 205-ன் கீழும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்போம்” என்றார்.
