புதுச்சேரி சட்டசபையில் வைரமுத்துக்கு பாராட்டு தீர்மானம்: மறுபரிசீலனை செய்யக் கோரி சபாநாயகரிடம் பாஜக எம்.எல்.ஏ. கடிதம்!
காரைக்கால், ஆக. 31:
புதுச்சேரி சட்டப்பேரவையில் கவிஞர் வைரமுத்துக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிரவி – திருப்பட்டினம் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வி.எம்.சி. மீனாட்சிசுந்தரம் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
சபாநாயகரிடம் பாஜக எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ஞானபீட விருது பெற்றுள்ள கவிஞர் வைரமுத்துக்கு புதுச்சேரி சட்டசபையில் பாராட்டுத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் இந்து சமயம், இந்து மத நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக பாரம்பரியங்கள் தொடர்பாக கவிஞர் வைரமுத்துவின் கடந்தகால கருத்துகள் மற்றும் சர்ச்சைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.”
மேலும் அக்கடிதத்தில், “சட்டசபை என்பது அனைத்து மதங்களையும், அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கைகளையும் சமமாக மதிக்கும் மிக உயரிய ஜனநாயக அமைப்பாகும். ஒருவருக்கு சட்டசபையில் பாராட்டுத் தீர்மானம் கொண்டுவருவது என்பது அவரது இலக்கியப் பங்களிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் முடிவாக இருக்கக் கூடாது; மாறாக அனைத்து தரப்பு மக்களின் மத மற்றும் ஆன்மீக உணர்வுகளையும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டும். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்பது குறித்து சபாநாயகர் உரிய முறையில் மறுபரிசீலனை செய்து தகுந்த முடிவெடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
