காரைக்காலில் ரூ.5 லட்சத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தொடங்கி வைத்தார்!
காரைக்கால்: காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை மற்றும் தர்மபுரம் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளை புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் முறைப்படி தொடங்கி வைத்தார்.
காரைக்கால் தெற்கு தொகுதி பகுதிகளில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களைச் சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று, புதுத்துறை, தர்மபுரம் வாய்க்கால்கள் மற்றும் அதனைச் சார்ந்த கிளை வாய்க்கால்கள் என மொத்தம் 14.05 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. காரைக்கால் பொதுப்பணித்துறை மூலம் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் தொடக்க நிகழ்வில், காரைக்கால் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் எம். அருள் அரசன், உதவிப் பொறியாளர் எஸ். கோவிந்தராஜ் மற்றும் துறை அதிகாரிகள், அப்பகுதி முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் தடையின்றி வெளியேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


