புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கு: விசாரணை செப். 4-க்கு ஒத்திவைப்பு!
புதுச்சேரி: குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனது சகோதரரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் தனது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து, அவரையும அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை பெறுவதற்காக ஆஜராகாமல் அவர் தவிர்த்து வந்தார். மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க மறுத்து கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31-க்குப் பிறகு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவதாக உறுதியளிக்கப்பட்டு மனு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றப் பொறுப்பு நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் ஆஜராகாத சூழலில், உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று சகோதரர் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

