கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தாலும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபான விற்பனையில் முறைகேடுகளைத் தடுப்பது தொடர்பாகப் பேசிய அமைச்சர், “டாஸ்மாக் பணியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 1 ரூபாய் விலை வைத்து விற்பனை செய்தால் கூட முதற்கட்டமாக 3 மாதங்கள் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படுவர். அதையும் மீறி தொடர்ந்து விலையை உயர்த்தி விற்பனை செய்யும் ஊழியர்கள் பணியில் இருந்தே நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
அதே வேளையில் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் புதிய சலுகைகளையும் அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்றும், கூடுதலாக மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



