சமூக நலத்திட்டங்களில் சாதனை படைத்த ரங்கசாமி உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை: பாகூர் எம்.எல்.ஏ செந்தில்குமார்
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தனி முத்திரை பதித்திருந்தாலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் தற்போதைய வளர்ச்சி மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகூர் எம்.எல்.ஏ செந்தில்குமார், “முதல்வர் ரங்கசாமி ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை கொண்டு வந்ததில் சிறந்த வரலாறு படைத்தவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதே வேளையில் புதுச்சேரியின் அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளில் அரசு உரிய கவனம் செலுத்தாமல் பின்தங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், பிற துறைகளுடன் ஒப்பிடுகையில் சமூகநல திட்டங்களுக்கான நிதி செலவீனம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் தொலைநோக்கு வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் இன்றியமையாதவை என்பதால், சாலைகள், பாலங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
