“எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது” – சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் நகைச்சுவை பதில்
புதுவை சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது எம்.எல்.ஏ. அய்யப்பன் பேசிக்கொண்டிருந்த நிலையில், அமைச்சர் நமச்சிவாயம் முதலமைச்சர் ரங்கசாமியுடன் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
இதனை கவனித்த சபாநாயகர் அன்பழகன், உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அமைச்சர் முதலமைச்சருடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் முடிந்தவுடன் இதுபோல் பேசியிருந்தால் பல காலதாமதங்களைத் தவிர்த்திருக்கலாம் எனக் கூறினார். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், உறுப்பினர்கள் முன்வைக்கும் பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சருடன் ஆலோசித்துதான் தீர்க்க வேண்டும் என்றும், அதற்காகவே முதலமைச்சரிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், “எனக்கு எதிராக பெரும் சதியே நடக்கிறது. இதில் சபாநாயகருக்கும் முக்கிய பங்கு உள்ளது” என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியதால் மீண்டும் சபையில் சிரிப்பலை எழுந்தது.

