காமராஜர் நகர் தொகுதியில் மின்வெட்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

புதுச்சேரி காமராஜர் நகர் அலுவலகத்தில், சாரம், லாஸ்பேட்டை மற்றும் வெங்கட்டா நகர் பகுதிகளின் முக்கிய தேவைகள் குறித்து மின்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
மின்துறை தலைமைப் பொறியாளர், துணைப் பொறியாளர், லைன்மேன் மற்றும் வயர்மேன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய மின்விளக்குகள் அமைத்தல், புதிதாக மின்மாற்றி அமைத்தல் மற்றும் தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், தொகுதியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மழைநீர் கால்வாய்களை தூர்வாரி, மழைநீர் தடையின்றி செல்ல தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சீரான மின்சாரம் மற்றும் மழைக்காலங்களில் தடையற்ற நீர்வடிகால் வசதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் போது எல்ஜேகே நிர்வாகப் பொதுச் செயலாளர் ராம்குமார், பொதுச் செயலாளர் டாக்டர் துரைசாமி மற்றும் குறைதீர்க்கும் குழு பொறுப்பாளர் ஷஜிதா ஆகியோர் உடனிருந்தனர்.

