தமிழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம்: கோயில்களில் வழிபாடு

திருச்சிராப்பள்ளி, ஆக. 24: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்து, பல்வேறு ஆன்மீக மற்றும் வரலாற்று நிகழ்வுகளில் பங்கேற்றார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, திருச்சி முத்துரையர் நினைவு மண்டபத்திற்குச் சென்ற அவர், பேரரசர் பெரும்பிடுகு முத்துரையர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவர் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் மற்றும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் நேமத்தில் அறையர் சுவர்ணமாரன் பிடாரி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற அருள்மிகு சப்த கன்னியர், காளபிடாரி, காளபிடாரனேஸ்வரர் கோயில் பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் சிறப்புரை ஆற்றுகையில், நம்முடைய தொன்மையான கலாச்சாரப் பண்பாட்டை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோயிலைப் புதுப்பித்து பராமரிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பக்தர்களிடம் வலியுறுத்தினார்.

