மகளிருக்கு ட்ரோன் பயிற்சி: ‘வான்மகள்’ திட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில், மாநில மகளிரை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வகையில் புதிய ‘வான்மகள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மகளிருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி வழங்கி, வேளாண் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறனை வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
ட்ரோன் தொழில்நுட்பத்தில் மகளிரைத் திறன்படுத்துதல், பூச்சிக்கொல்லி மற்றும் உரம் தெளிப்பு போன்ற பயிர்ப் பாதுகாப்புப் பணிகளை ட்ரோன் மூலம் செய்யக்கூடிய பெண் ட்ரோன் பைலட்டுகளை உருவாக்குதல், சுயஉதவிக் குழு மகளிருக்குப் புதிய வருமான வழி உருவாக்குதல், வேளாண் துறையில் பாதுகாப்பான, குறைந்த செலவில் பணிகளை முடிக்கும் நவீன முறைகளை ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள்.
மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்துடன் இணைந்து, பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்கி, 15 நாட்கள் பயிற்சி, உரிமம், பராமரிப்பு, காப்பீடு ஆகியவற்றுடன் கூடிய முழுத் தொகுப்பு வசதியுடன் மகளிரைத் திறன்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இதன்கீழ், பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வாங்க 80% வரை மத்திய உதவி (அதிகபட்சம் ரூ.8 லட்சம்) வழங்கப்படுகிறது.