கடல் சீற்றம்: புதுச்சேரி கடற்கரையில் கடலோர காவல்படை தீவிர ரோந்து
புதுச்சேரி கடற்கரையில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கடலோர காவல்படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
கடல் சீற்றம் அதிகரித்து அலைகள் உயரமாக வருவதால், கடலுக்குள் ஆழமாகச் சென்று குளிப்பது உயிருக்கு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில், கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நேரடியாக எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
கடலோர காவல்படை கண்காணிப்பாளர் தனசேகரன் மற்றும் ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, காவலர்கள் கடற்கரை முழுவதும் சுற்றி வருகின்றனர்.
“ஆழம் செல்லாதீங்க, அலைகள் வேகமாக இருக்கிறது, இங்கிருந்து வெளியேறுங்கள்” என மக்கள் மொழியில் பேசி விளக்கி, கடலில் இறங்க முயல்பவர்களைத் தடுத்துக் கரையை நோக்கி அனுப்பி வருகின்றனர்.
எச்சரிக்கைகளை மீறிக் கடலுக்குள் செல்ல முயல்பவர்களிடம் காவலர்கள் உடனடியாகச் சென்று, கடலின் ஆபத்துகளை விளக்கி எச்சரிக்கைப் பலகைகளைக் காட்டி, உயிர்ப் பாதுகாப்பே முக்கியம் என்பதை வலியுறுத்துகின்றனர்.


